Wednesday, August 12, 2020

2017 கவிதைகள்

 கவிதை செய்யும்போதும்

காதல் செய்யும்போதும்
காலம் நம்மை மென்று
தின்னக் காத்திருக்கும், கவனம்!
முன்னம் முந்தி விழுங்கிவிடுங்கள்,
அக் கால சர்ப்பத்தை!
இப்போது உங்களுக்குள்
செரித்துக் கிடக்கும் காலம்
உங்களுடையது,
உங்களுக்கே ஆனது,
உங்களால் ஆனது!
இனி, எழுத்தெனும் சாட்டையைச் சொடுக்கி கவிதையோ,
இனி, உணர்வெனும் உடுக்கையை உடுத்தி காதலோ
செய்து களித்திருப்பீராக!!
##
எவ்வளவைத்தான் எழுதுவது
என்று எழுத்தாளனும்
அவ்வளவையுமா வாசிக்கவேண்டும்
என்று வாசகனும்
ஆயாசப்பட்டுக் கொண்டிருக்கையில்
எழுதவும் வாசிக்கவும் அறிந்த
எத்தனையோ பேர்
எழுதாமலும் வாசிக்காமலும்
காப்பாற்றி வருகிறார்கள்,
எழுத்தையும் வாசிப்பையும்!
##
தயவுசெய்து எனை,
நிராகரி.
தாங்கொணாத் துயர் தருகிறது,
உனதன்பு .
##
என்றென்றைக்குமாய் நினைவுகளினூடாக
நமைக் கிளர்த்தி வருபவளை ,
என்றென்றைக்குமாய் எண்ணங்களினூடாக
நமை மலர்த்தி வருபவளை,
என்றென்றைக்குமாய் தம் வடிவினூடாக
நமை உய்விக்க வந்தவளை,
என்றென்றைக்குமாய் தம் தரிசனத்தினூடாக
நமை உயிர்ப்பித்து வருபவளை
முன்னாள் காதலி
என்றெண்ணுவோருக்கும்,
என்றெழுதுவோருக்கும்,
என்றுசொல்லுவோருக்கும்
காதலின் பெயரால்
கவிதை உத்தரவிடுகிறது,
இனி அவர்களை இப்படித்தான்
அழைக்க வேண்டுமென...
" எந்நாளும் காதலி "
##
தார்ச் சாலையைக்
கொத்தி கொத்தி
மழுங்கிப் போயிற்று,
கானல் நீரென்றறியாக்
கொக்கின் கூரலகு!
##
ஆதியிலே வார்த்தை இருந்தது.
வார்த்தை காதலாய் இருந்தது.
காதலே வார்த்தையாய் வந்திருந்தது.
##
எப்படி நடக்கிறது
அச்சவ்வூடு பரவல்,
இதயங்களுக்கிடையே?
எத்தனை ஒத்த திசைவேகம், அச்சிந்தைகளுக்குள்?
எப்படிச் சாத்தியம்
அப்பரஸ்பரப் புன்னகை,
ஒரு கருத்தியலை விளக்கிவிடுவது?
எப் பக்கமிருந்து
பரப்பு இழுவிசை?
எப்படித் தெரிகிறது ஒரே காட்சி,
அத்தனை கோணங்களிலும்?
எப்படித் தோன்றுகிறது அவ்வானவில், எல்லோர் வாழ்க்கையிலும்?
எப்படித் தருகிறது அக்கானல்நீர்,
அத்தனை குளிர்ச்சி?
எப்படி விழுங்குகிறது அக்கருந்துளை,
எல்லோர் இருப்பையும்?
எப்படி நிற்கின்றன அக்கோள்கள்,
எப்போதும் நேர்கோட்டில்?
எப்படிப் பொலிகிறது அப்பேருரு,
எல்லோர் மனத்துள்ளும்?
எப்படிப் பாய்கிறது
எவரிடமிருந்தும் எவருக்கும்,
அக்காதலெனும் கதிரொளி?
##
தேநீரின் மிடறொன்று நமக்குள்
இளஞ்சூட்டைப் பரப்பிவிடுவதைப்போல்
ஏதோ ஒரு மெல்லிசை நமக்குள் தென்றலைக் கொண்டுவந்து
சேர்த்துவிடுவதைப்போல்
எப்படியோ ஒரு பழம்வாசனை நம்
நினைவுகளைக் கிளர்த்தி விடுவதைப்போல்
எப்போதோ நிகழ்த்தப்பட்ட ஸ்பரிசம்
நம் புலன்களைந்தையும் புதுக்கிவிடுவதைப்போல் ...
இத்தனையையும்
மொத்தமாய்த் தந்துவிடும்
வல்லமை வரித்தது,
இன்னொன்று சொல்லென்றாள்..
கிஞ்சித்தும் தயக்கமின்றிச் சொன்னேன்...
நீ சொல்லும் சின்னஞ்சிறிய சொல்லெதுவெனினும்!
##
ஓர் சொல் தூக்கத்தை
குலைத்துவிடக் கூடும்.
அதன் முன்னும் பின்னும்
ஓராயிரம் சொற்கள் ஊடாடினாலும்
உள்ளுக்குள் நின்றெரியும்
அச்சொல்லின் சுடர்
சற்றுங் குறைவுபடாது.
அகத்தின் அடுக்குகளனைத்திலும் அதிஉக்கிரத்துடன் சூல்கொண்டு
நிற்கும் அந்தச்சொல்.
தன்னியல்பு உரைத்திட
வரமாய் வாய்த்துக் கிடக்கும்
அச்சிறிய சொல்.
அப்படியோர் சொல்லை
கடக்க நேருமாயின்
எழுதத் துவங்குவீர்
உமது கவிதையை!
##
நீ எழுப்பியதோ,
நான் எழுப்பியதோ
நம்மிடையே எழும்பியிருக்கும்
இச்சுவர் நிச்சயமாக
நாம் எழுப்பியதில்லை.
எனினும்,
நீ மட்டுமோ,
நான் மட்டுமோ
அதை உடைத்துவிடவும் இயலாது.
இணைந்து நொறுக்குவதற்கான
எல்லாச் சாத்தியக் கூறுகளையும்
உடனடியாகப் பரிசீலிக்க வேண்டியிருப்பதால்
சீக்கிரம் சொல்...
எங்கே,
எப்படி,
எப்போது சந்திப்பது?
##
கடவுளின் கடுந்தவத்திற்கிரங்கிப்
பிரசன்னமானான் கவிஞன்.
வரமொன்றருள்க என்று
அவர் இறைஞ்சுவதற்குள்
கவிதையொன்றெழுதுக என்று ஆசீர்வதித்தான்.
இப்பூவுலகைப் படைத்ததன்
சாபல்யத்தை அடைந்துவிட்டதாய்க் கருதி,
கண்களில் நீர் ததும்ப
எழுதத் துவங்கிய
கடவுளின் கைகள் நடுங்கின.
முன்னம் அபயகரம்
நீட்டியிருந்த கவிஞன்
இப்போது உபயகரம் காட்டி
காற்றில் எழுதிக் காண்பிக்கிறான் முதலடியை.
கண்களில் ஒற்றிக்கொண்ட கடவுள்
எழுதத் துவங்கினார், இப்படியாக...

"நன்று கவிதை"
##
நாவல் ஒன்றை நானூறு பக்கம்
நேற்றுத்தான் எழுதி முடித்தேன்.
ஏழு சிறுகதைகள் ஏற்கனவே எழுதியாயிற்று.
சிலபல கட்டுரைகளும்
கணக்கிலுண்டு.
பத்திகளும் எழுதுவேன்.
ஆனாலும், பாருங்கள்...
இந்தக் கவிதை என்ற ஒன்றில்
இரண்டொரு வரிகள் எழுதுவதற்குள்
இறந்தே போய்விடுவேன் போலிருக்கிறது!
##
சொல் என்பது ஒளி. வழி காட்டும்.
சொல் என்பது உளி. பிளக்கும்.
சொல் என்பது விழி. பார்க்கும்.

சொல் என்பது குழி. தள்ளிவிடும்.
சொல் என்பது தீ. பற்றும்.
சொல் என்பது மருந்து. காக்கும்.

சொல் என்பது வெம்மை. சூடேற்றும்.
சொல் என்பது நிழல். குளிர் தரும்.
சொல் என்பது தென்றல். தழுவும்.

சொல் என்பது புயல். தூக்கியெறியும்.
சொல் என்பது இடி. பேரொலி.
சொல் என்பது மின்னல். பேரொளி.

சொல் என்பது ஏர். உழும்.
சொல் என்பது விதை. முளைக்கும்.
சொல் என்பது நிலம். நிகரம் தரும்.
##
புதினமொன்றில் பக்கந்தோறும்
பதியலாம் பல கவிதைகள்.
சிறுகதையில் நறுக்கென்று
செதுக்கலாம் சில கவிதைகள்.
கட்டுரையிலும்கூட
கவனமாகச் சொருகிவிடலாம்
சிலபல கவிதைகள்.
ஆனால்,
கவிதை என்ற ஒன்றில்
கவிதை தவிர ஏனையவற்றை
எழுதிவிட இயலுமா என்ன?
##
முற்றுப்பெறாத
என் கவிதையொன்று
நெடுங்காலமாய்த்
தேடியலைந்த
ஒற்றைச்சொல்
நீ !
##
நீங்கள் என் வாழ்வையும்,
நான் உங்கள் வாழ்வையும்
வாழ்ந்து பார்ப்பதுவும்,
வாழ்ந்து தீர்ப்பதுவுமே
நம் வாழ்வு!
##
வெளியெங்கும்
வியாபித்துக் கிடக்கிறது
எம்மினத்தின் பேரோலம்.
நெடுவனத்தின் கொடுந்தீயாய்
எமதிருப்பு.
உற்றுக் கேளுங்கள்,
நம்பியதால்
நாதியற்றுப் போனவர்களின்
கூக்குரல்.
என்றேனும் ஒருநாள் அக்குரல்கள் குன்றெனக் கூடிநின்று
சூல்கொள்ளும்.
அவ்வெப்பந்தாங்காது
உங்கள் கயமைகள்
கருகிக் கிடப்பதான
எங்கள் கனவு
அன்று பலித்திருக்கும்!
-----------------------------------------

முள்ளிவாய்க்கால்
இனப்படுகொலையின் போது
கையாலாகாது
குற்றவுணர்வு குறுகுறுக்க
எழுதியது!
##
என்றென்றைக்குமாய்
நினைவுகளினூடாக
நமைக் கிளர்த்தி வருபவளை,
என்றென்றைக்குமாய்
எண்ணங்களினூடாக
நமை மலர்த்தி வருபவளை,
என்றென்றைக்குமாய்
தம் வடிவினூடாக
நமை உய்விக்க வந்தவளை,
என்றென்றைக்குமாய்
தம் தரிசனத்தினூடாக
நமை உயிர்ப்பித்து வருபவளை,
முன்னாள் காதலி
என்றெண்ணுவோருக்கும்,
என்றெழுதுவோருக்கும்,
என்றுசொல்லுவோருக்கும்
கவிதையின் பெயரால்
காதல் உத்தரவிடுகிறது,
இனி அவர்களை இப்படித்தான்
அழைக்க வேண்டுமென...

" எந்நாளும் காதலி "
##
தேநீரின் மிடறொன்று நமக்குள்
இளஞ்சூட்டைப் பரப்பிவிடுவதைப் போல்
ஏதோ ஒரு மெல்லிசை நமக்குள் தென்றலைக் கொண்டுவந்து சேர்த்துவிடுவதைப் போல்
எப்படியோ ஒரு பழம்வாசனை நம்
நினைவுகளைக் கிளர்த்தி விடுவதைப் போல்
எப்போதோ நிகழ்த்தப்பட்ட ஸ்பரிசம் நம்
புலன்களைந்தையும் புதுக்கிவிடுவதைப் போல் ...
இத்தனையையும் மொத்தமாய்த் தந்துவிடும்
வல்லமை வாய்த்தது
இன்னொன்று சொல்லென்றாள்..
கிஞ்சித்தும் தயக்கமின்றிச் சொன்னேன்...

நீ சொல்லும் சின்னஞ்சிறிய சொல்லெதுவெனினும்!
##
முள்முடியோ
மணிமுடியோ
சடைமுடியோ

நாம் சூடியிருப்பது
நம்முடைய முடியல்ல.

யாருக்கான தண்டனையோ
யாருடைய கனவோ
யாருடைய துறவோ

நாம் சூடியிருப்பது
நம்முடைய முடியல்ல.

யாரோ ஒருவரின் பேராசை
யாரோ ஒருவரின் துரோகம்
யாரோ ஒருவரின் பொறாமை

நாம் சூடியிருப்பது
நம்முடைய முடியல்ல.

நமக்கான தண்டனையை
நமக்கான கனவை
நமக்கான துறவை

நம் பேராசையை
நம் துரோகத்தை
நம் பொறாமையை

நாம் எப்பாடுபட்டேனும்
பிறருக்குச் சூட்டிவிடுவதால்

நாம் சூடியிருப்பது
நம்முடைய முடியல்ல.

##

மேவிக்கொண்டு போகிற
சிறுபள்ளமெனத்தான்
அவ்விரிசல் அங்கு வீற்றிருந்தது.
ஒரு பொருத்தமான சொல்லோ,
பெருத்த மெளனமோ
அதைச் செய்திருக்கக் கூடும்.
கருணையற்ற காலத்தின்
கொடுந்துயர் கரங்களில் சிக்கி,
சரிசெய்யவே இயலாப் பெரும்பிளவொன்றின்
இப்பக்கம் நானும் அப்பக்கம் நீயும்
நின்றுகொண்டு இப்போது இடும் கூக்குரல்
எந்தப் பயனுமின்றி எல்லா மலைகளிலும்
எதிரொலித்துக் கொண்டே இருக்கிறது.

##

காதல் அகராதியின் கடைசிப் பதிப்பில்
முன்னாள் காதலன் என்ற சொல்லும்
முன்னாள் காதலி என்ற சொல்லும்
நிரந்தரமாக நீக்கப்படவேண்டுமென்று
கோரிக்கை விடுத்திருப்பது,
இந்நாள் காதலர்கள் அல்ல,
எந்நாளும் காதலர்கள்!
##
என் காதலை நீ ஏற்றுக்கொண்ட தருணத்தை விடவும்
நிராகரித்த நிமிடங்களையே
நான் மிகவும் சிலாகிக்கிறேன்.
முன்னதில் முகிழ்த்தது உன் இயல்பு.
பின்னதில் வெளிப்பட்டது உன் நடிப்பு.
எத்தனை நாள் பார்த்தாயோ
அவ்வொத்திகையை.
இருப்பினும் இன்றைய புறக்கணிப்பின்
அரங்கேற்றம் அத்தனை கச்சிதமாய் இல்லை.
நிராயுதபாணியாகத்தான் நிற்கிறேன்,
என்றாலும்—
உனக்கொரு வரம் தரும் வாஞ்சையோடு...
இன்று போய் நாளை வா!

##
சொல் நீ.
பொருள் நீ.
சொல்லின் பொருளும் நீ.
பொருளின் சொல்லும் நீ.
சொல்லாததன் பொருளும் நீ.
பொருளில்லாததன் சொல்லும் நீ.
சொல்லினிடை வெளியும் நீ.
வெளியினிடை சொல்லும் நீ.
##
ஒரே நேரத்தில் ஒளி
அலையாகவும் துகளாகவும்
இருநிலையில் இருப்பதாக
இயம்புகிறது, இயற்பியல்.
ஒரே நேரத்தில் நீ
நினைவாகவும் நிகழ்வாகவும்
இருப்பதைப் போல!
##
மனக்குளத்தில்
மண்டும் அழுக்குகளை
தின்று தீர்க்கும்
வல்லமை வரித்தது
இலக்கியமீன்.
##
மீதீண்டலுக்காய்
காலங்காலமாகக்
காத்துக்கிடக்கின்றன,
கவிதையொன்றை
வரையுமுகத்தான்
கவிஞனொருவனால்
விலக்கப்பட்ட சொற்கள்!

Wednesday, August 5, 2020